Sunday, November 21, 2021

ஜாதி

உலகில் எல்லா மனிதக் கூட்டங்களுக்கிடையேயும் பல்வேறு வடிவிலான பிரச்சனைகள். நம் நாட்டில் ஜாதி பெரிய பிரச்சனையாக பேசப்படுகிறது. சில நூறு வருடங்களாக பல்வேறு காலங்களில் சில தலைவர்கள் இதனை எதிர்த்து போராடிச் சென்றுள்ளனர், தற்போது சிலர் போராடியும் வருகிறார்கள். உண்மையில் ஜாதி பிரச்சனையா?! இது ஒழிந்தால் மனிதர்கள் அமைதியாக, சந்தோஷமாக வாழ முடியுமா என்று பார்ப்போம். இந்த ஜாதி என்ற பெயர் ஒன்று இல்லாத பகுதிகளில் மக்கள் சமமாக நடத்தப்படுகிறார்களா, பிரச்சனைகள் இல்லாமல் வாழ்கிறார்களா?! என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. அடிப்படை பிரச்சனை தான் பின் என்ன? இது எங்கிருந்து தொடங்குகின்றது?


பிறந்த உடனேயே பிறந்தது ஆணா, பெண்ணா என்று தெரிந்தவுடன் ஏற்படும் வித்தியாசத்தில் இருந்தே தொடங்குகின்றது மனிதர்களின் பிரச்சனை. பின் தோலின் நிறத்தில் கூட ஏற்றத் தாழ்வை மனிதன் காணத் தொடங்குகிறான். மனித மன(தி-க்குரங்கி)-ற்கு பிறந்த பாலை, மதத்தை, ஊரை, குலத்தை, ஜாதியை, கற்ற கல்வியை, பெற்ற செல்வத்தை, தாய் மொழியை, வாழும் பகுதியை, பெற்ற பதவியை (தொழில்), ..... வைத்து “தான்” மற்றவர்களை விட (மனோ ரீதியாக) சற்று உயர்ந்தவன் என்று எப்போதும் காட்டிகொள்வது அடிப்படை வியாதியாகத் தெரிகின்றது.  இதில் எல்லாவற்றிலும் ஒன்று பொதுவானதாகத் தெரிகின்றது. அது “தன்னை” பெரியவனாகக் காட்டிகொள்வதில் இருக்கும் தன்முனைப்பு மட்டுமே. ஒருவன் நேரடியாக “தான்” மற்றவர்களை விட பெரியவன் என்று சொல்லிக் கொண்டால் அசிங்கமாக இருக்கும், சமூகத்தில் கௌரவமாக இருக்காது என்று அவன் “தான்” சார்ந்த, தோதான ஏதாவது ஒன்றை தொங்கிக் கொண்டு அது பெரியது (அதனால் நானும் பெரியவன்) என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான்; நாய் எலும்பை கடிப்பதினால் சுவை கிடைப்பதாக எண்ணுவது போல. எந்த மதமும், மொழியும், இனமும், ஊரும், கல்வியும், பணமும், பாலும், பதவியும் தன்னைத் தானே பெரியதாகக் காட்டிக் கொள்வதில்லை; அது சாத்தியமும் இல்லை.


அதனால் தான் இந்த பூமியில் நடந்த ஞானிகளோ, பெரியவர்களோ ஜாதிகள் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லவில்லை, அதற்காக போராடவுமில்லை. நேரடியாக அடிப்படை வியாதியான அகங்காரத்தையே தொலைக்க வழி சொல்லிப் போனார்கள். அடிப்படை வியாதி அழியாமல் எந்த வித மனித ஏற்றத்தாழ்வும் முற்றும் அழியாது. ஆண், பெண் ஏற்றத்தாழ்வை ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். நான் பெரியவன்/ள் — எங்கள் இனம் தான் பெரியது என்ற பிரச்சனையை, இரு பாலினருக்கும் இருக்கும் வித்தியாசங்களை களைந்தால் சரியாகி விடும் என்பது எவ்வளவு கோமாளித்தனமோ அவ்வளவு தான் ஜாதி அழிந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசுபவர்களின் வாதமும். ஏற்றத் தாழ்வுகள் வெளி அடையாளங்களால் வருவதில்லை, தனி மனித மனங்களால் தான் உண்டாகின்றன. அதனால் தான் ஞானிகள் உன்னை சரி செய்துக்கொள் உலகம் தன்னால் சரியாகிவிடும் என்கிறார்கள். அப்படியென்றால் ஜாதீய ஏற்றத் தாழ்வுகளில் தவறு இல்லையா என்றால் தவறு தான். ஆனால் அது ஜாதியால் வருவதில்லை அதை வைத்து விளையாடும் தனி மனித மனத்தால் தான் பிரச்சனை. மற்ற அடையாளங்களால் வரும் ஏற்றத் தாழ்வுகளும் அதே அளவு வன்மையானவை தான், ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல. மதத்தில், மொழியில், இனத்தில், ஊரில், தொழிலில், தோலில் பிரச்சனை இல்லை.


அப்படியென்றால் ஜாதியை ஒழிக்க வேண்டி போராடுபவர்கள் யார் என்றால் ஒன்று அவர்களுக்கு மனிதனின் அடிப்படை வியாதியை முழுதாக புரிந்துக் கொள்ளும் அளவு பார்வை/பக்குவம் இல்லை அல்லது ஜாதியை வைத்து மக்களிடையே அரசியல் செய்கிறவர்கள், இந்த இரண்டினுள் ஒன்றில் தான் இவர்கள் வருவார்கள்.


மனித மனத்தின் இந்த மனோ ரீதியான அடிப்படை வியாதியை (அகங்காரம் – ஏற்றத் தாழ்வு ஆட்டம்) புரிந்துக் கொண்டு அமைதியடைபவர்கள் ஞானிகளாகிறார்கள்-பிறவிச் சுழலில் இருந்து விடுபடுகிறார்கள். மற்றவர்கள் என்றேனும் ஒருநாள் அல்லது ஏதோ ஒரு பிறவியில் புரிந்து கொள்வார்கள், அமைதியடைவார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் இல்லை விடை, இதில் “நான்” என்ன செய்யப்போகிறேன் என்பதில் தான் இருக்கிறது “விடுதலை’/மோட்சம்”.


#caste_Part_1


#caste_politics #mind_game #freedom #moksha #ஜாதி_அரசியல் #மனம் #விடுதலை  #மோட்சம் #மோக்ஷம்